Friday, May 16, 2008

முன்னுரை

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - புக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு


இதை இயற்றியவர் ஒளவையார் . அவர் ஒரு பெரிய கணபதி உபாசகர் . அவர் முழு முதற் கடவுளான விநாயகரை புருவ மத்தியில் தியானித்து யோக சாஸ்திரம் முழுவதையும் உள்ளடக்கியதான "விநாயகர் அகவலைப் " பாடியிருக்கிறார் . அதைப் பாராயணம் செய்தால் பரம ஞானம் உண்டாகும் . ஔவையார் பற்றி சுவாரஸ்யமான நிகழ்ச்சி ஒன்று உண்டு

ஒரு சமயம் சுந்தர மூர்த்தி சுவாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கயிலாயத்திற்குச் செல்ல விரும்பினார்கள் . அவர்கள் ஔவை யையும் உடன் அழைத்துச் செல்ல எண்ணி , ஔவை யின் இருப்பிடத்திற்கு வந்தார்கள் . அவர்கள் வந்த சமயத்தில் ஔவையார் கணபதியை பூஜித்துக் கொண்டிருந்தார்.விரைவில் கைலாயத்திற்குப் புறப்பட விரும்பிய சுந்தர மூர்த்தி சுவாமிகளும் , சேரமான் பெருமாள் நாயனாரும் , பூஜையை துரிதமாக முடிக்கும்படி ஔவை யை வற்புறுத்தினார்கள். ஔவை யோ , "எனக்கு விநாயக பூஜையே கைலாசம் . எனவே எந்தக் காரணத்தை முன்னிட்டும் என்னால் விநாயக பூஜையை விரைவு படுத்துவதோ பாதியில் நிறுத்துவதோ இயலாது " என்று பதிலுரைத்துவிட்டு தொடர்ந்து பூஜையில் ஈடுபட்டார் . ஔவை யின் இந்த பதிலைக் கேட்ட சுந்தர மூர்த்தி சுவாமிகளும் சேரமானும் ஔவை யைத் தவிர்த்துவிட்டு கயிலைக்குப் புறப்பட்டுவிட்டார்கள் .அவர்கள் சென்ற பிறகு பூஜையைத் ஔவை , பொறுமையாக பூஜையை செய்து முடித்தார் . "எனக்கு விநாயக பூஜையே கைலாசம் " என்று கூறி பக்தியுடனும் அன்புடனும் பூஜிக்கப் பட்ட விநாயகரே பூஜை யின் இறுதியில் ஔவை க்குக் காட்சியளித்து ,தனது துதிக்கையால் அவரை அப்படியே ஒரே தூக்காக தூக்கி கைலாயத்தில் கொண்டு போய் சேர்த்துவிட்டார் . இவருக்கு முன்னால் புறப்பட்ட சுந்தரரும் சேரமானும் இவருக்கு பிறகே கயிலாத்தை வந்தடைந்தார்கள் .

யானை முகனான கணபதி செய்யாத அநுக்ரஹமேயில்லை. முக்கியமாக எழுத்துத் துறைக்கு அவர் ஆற்றிய பணி அளவிடற்கரியது. எழுத்தாளர்களுக்கே அவர்தான் முன்னோடி என்றால் அது மிகையாகாது. பொதுவாகவே யானைக்குத தன் தந்தத்தின் மீது மிகவும் மதிப்பு அதிகம். இதனாலேயே எப்போதும் தனது தந்தத்தை மிகவும் கவனமாக பாதுகாத்துக் கொள்ளும். தனது மதிப்பிற்கும் கௌரவத்திற்கும் அடையாளமாகத் திகழும் அந்த தந்தத்தையே முறித்து, மஹா பாரதத்தை வியாசர் சொல்ல சொல்ல இமய மலையில் எழுதினார். அதாவது தனது மதிப்பையும் அந்தஸ்தையும் விட உலகுக்கு தர்மத்தை போதிப்பது முக்கியம் என்பதை செயலில் நிகழ்த்திக் காட்டினார்.

மஹா கணபதி என்று அவர் பெயர் பெற்றிருந்தாலும் உண்மையில் அவர் குழந்தை சுவாமியே. குழந்தைகளுக்கான தர்மத்தை போதித்தவரும் அவரே.

ஒரு சமயம் நாரதர், ஒரு மாம்பழத்தை கயிலையில் உறையும் எம்பெருமானிடம் கொடுத்து, "இது ஞானப்பழம். இதை முழுவதுமாக ஒருவரே உண்ண வேண்டும். அப்போதுதான் இதன் முழு பலனும் கிடைக்கும்" என்று கூறினார். தனது இரு குழந்தைகளான விக்நேஸ்வரர் மற்றும் ஆறு முக பெருமான் ஆகிய இருவரில் பழத்தை யாருக்கு அளிப்பது என்று தெரியாமல் மனம் குழம்பினார். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக, தனது இரு குழந்தைகளையும் அழைத்து இருவரில் யார் முதலில் உலகைச் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே இந்தப் பழம் என அறிவித்துவிட்டார். உடனே முருகப் பெருமான் தனது மயில் வாகனத்திலேறி உலகை வலம் வரப் புறப்பட்டார். அருகில் நின்று கொண்டிருந்த கணபதியோ சிறிதும் தாமதிக்காமல் தனது பெற்றோரான பரமனையும் உமையம்மையையும் வலம் வந்து நமஸ்கரித்து , குழந்தைகளுக்குத் தங்கள் பெற்றோர் தான் உலகமே என்பதை உலகுக்கு உணர்த்தினார். அது மட்டுமில்லாமல் "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எ‌ன்ற தனது பக்தையான ஔவையின் வாகையும் மெய்ப்பித்துக் காட்டினார்.

இந்தக் கதைகளையெல்லாம் நான் சிறுமியாக இருந்த பொது என் தந்தை கூறக் கேட்டிருக்கிறேன். பொதுவாகவே எங்கள் தகப்பனார், குழந்தைகளுக்கு மிகவும் நகைச்சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் அதே சமயம் பயனுள்ளதாகவும் கதைகள் கூறுவதில் மிகவும் வல்லவர். தாம் கூறும் கதைகளும் மற்ற விஷயங்களும் குழந்தைகளிடம் அறிவை மட்டுமில்லாமல் பண்பாடு பக்தி மற்றும் ஒழுக்கத்தையும் வளர்ப்பவையாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். நாங்கள் ஏதேனும் தவறு செய்துவிட்டால் கூட அவற்றையும் ஏதேனும் சுவாரஸ்யமான கதைகள்
மூலமே எங்களுக்கு உணர்த்தித் தவறையும் திருத்திவிடுவார். அவர் எங்களுக்குக் கூறிய கதைகளையும், போதித்த நீதி நெறிகளையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமையடைவதுடன், இந் நூலை காலஞ்சென்ற எனது தந்தையின் பாத கமலங்களில் சமர்ப்பிக்கிறேன். .

No comments: